இருளை நீக்கி ஒளியைத் தரும் தீப ஒளித் திருநாளான தீபாவளி திருநாளை தமிழ்நாட்டு மக்கள் வெகு விமரிசையாக கொண்டாட காத்திருக்கின்றனர். தீபாவளி தினத்தன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, வீட்டில் விதவிதமாக செய்யப்படும் திண்பண்டங்களை ருசித்து மக்கள் கொண்டாடுவர். அன்றைய தினத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரே விசயம் பட்டாசுதான்.
விதவிதமான வெடிகள், வானத்தை பிளக்கும் சத்தங்கள், எங்கு பார்த்தாலும் மின்னி வண்ணமயமாய் காட்சியளிக்கும். எனவே இந்தத் திருநாளை தமிழ்நாடு அரசு விதித்திருக்கும் சட்ட விதிகளை மதித்து சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்வோம்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளநிலையில், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு விற்பனை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
2018ஆம் ஆண்டை விட இந்த வருடம் தீபாவளி சிறுவர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என பட்டாசு கடை உரிமையாளர் முக்கனி தெரிவிக்கிறார். இதில் அப்படி என்னதான் ஸ்பஷல் இருக்கிறது என்பதை அவரே விளக்குகிறார்.
'சிறுவா்களை கவரும் வகையில் விதவிதமான கம்பி மத்தாப்புகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கம்பி மத்தாப்புகள் 7 செ.மி. முதல் அதிக பட்சமாக 100 செ.மீ வரை விற்பனைக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விற்பனை செய்யப்படும் கம்பி மத்தாப்புகள், எலக்ட்ரிக் வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த வருடம் பல்வேறு விதமான வண்ணங்களில் கம்பி மத்தாப்புகள் கிடைக்கும்.
ஒரே கம்பி மத்தாப்பில் நான்கு விதமான வண்ணங்களில் வெடிக்கும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நீலம் சிவப்பு மற்றும் மல்டி கலரிலும் கிடைக்கிறது. அதேபோல் சிறுவா்கள் அதிகம் பயன்படுத்தும் தரைச்சக்கரம் இந்தாண்டு விதவிதமான கலா்களில் கிடைக்கும்' என்று அவர் கூறினார்.
மேலும் பட்டாசு வெடி உற்பத்தியாளர் கணேஷ்குமார் தெரிவிக்கையில், இந்த ஆண்டு புதிதாக இரண்டு பக்கமும் சுற்றும் தரைச்சக்கரம் விற்பனை செய்யப்படுகிறது. ஒலி எழுப்பிய படி வெடிக்கும் தரைச்சக்கரமும் இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது. அதில் மூன்று வகையான அளவுகளில் கிடைக்கிறது.
சிறுவா்கள் அதிகம் பயன்படுத்தும் பென்சில் வகையான மத்தாப்புகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் குறிப்பாக 7 செ.மி முதல் 15 செ.மி அளவுகளில் கிடைக்கிறது. கேமரா ஃப்ளாஷ் போன்ற அமைப்புடைய பட்டாசு பற்ற வைத்தவுடன் கேமரா ஃப்ளாஷில் ஏற்படும் வெளிச்சத்தை உருவாக்குகிறது. புதிதாக வந்துள்ள இந்த கேமரா ஃபிளாஷ் சிறுவர்களை வெகுவாக கவரும்.
மேலும், சிறுவா்கள் பயன்படுத்தும் பட்டாசுகள் அனைத்தும் 30 விழுக்காடு மாசு குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.