விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு 2 கார்கள் மின்னல் வேகத்தில் தாறுமாறாக சென்றன. சினிமாவில் வரும் ரேஸ் காட்சி போல் இந்த கார்கள் ஒன்றையொன்று முந்தி கொண்டு சென்றுள்ளன. சாலையில் யாரும் சென்றால் உயிர்பலி ஆகிவிடும் அளவுக்கு வேகமாக சென்றுள்ளது.
இந்த கார்கள் காந்தி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்தும், நிறுத்தாமல் விரைவாக சென்றதாகத் தெரிகிறது. காவல்துறை நிறுத்தியும் நிற்காமல் அதிவிரைவாக சென்ற கார்களை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர்.
இதையடுத்து புதிய பேருந்து நிலையம் அருகே கார்கள் நிலைதடுமாறி ஒன்றுடன் ஒன்று உரசி பலமாக மோதியதில், ஒரு கார் புதிய பேருந்து நிலைய தூண் மீது மோதியது. மற்றொரு கார் அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
இரண்டு கார்களையும் விரட்டி வந்த காவல்துறையினர், ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கார்களை மீட்டு காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர்கள் நகைப்பட்டறை அதிபர்களான கோவை ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த கார்த்திக், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு நகைப் பட்டறை அதிபரின் இல்ல நிகழ்ச்சிக்காக வந்ததும், பின் இருவரும் மது போதையில் கார் ரேஸில் ஈடுபட்டதும் தெரியவந்தது. காரில் உயிர்காக்கும் ஏர்பேக் இருந்ததால் இருவரும் எந்த காயமுமின்றி உயிர் பிழைத்தனர். இந்த கார் ரேஸ் சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.