விருதுநகரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் காலதாமதமாகவும் முறையாக வேட்புமனுவை பூர்த்தி செய்யாமலும் வந்த காரணத்தால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய் கிழமை தொடங்கியது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு அளிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்து உள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதை அடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீரப்பன், சுயேச்சையாக நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மதியம் 2.55 மணிக்கு வந்தார்.
அப்போது அவர் வேட்பு மனு சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல் இருந்துள்ளது. அவற்றை சரி செய்து பூர்த்தி செய்ய காலதாமதம் ஆனதால், அவரால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போனது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.