சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது மேட்டமலை கிராமம். இந்தக் கிராமத்தில் செல்லியாரம்மன் கோயில், பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் பிரதான சாலையில் அமைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று (ஏப். 12) இரவு பூசாரி கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இன்று காலையில் வழக்கம்போல் கோயிலைத் திறக்கவந்த பூசாரி கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடுபோன சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் தடயம் ஏதும் உள்ளதா என்று தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வுமேற்கொண்டனர்.
பின்னர் விருதுநகர் மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற திருடர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரேநாளில் இரண்டு கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மழை!