விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பாஜக நிர்வாகி இல்ல விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளரைச் சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பணபலம், அதிகார பலம், ஆள் பலம் அவற்றின் மூலமாகத் தங்களுக்கு எதிராகப் போட்டியிட்டவர்களைக் களத்திலிருந்து கரையேற்றக்கூடிய வேலையில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் வேட்பாளர் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பார்வை சற்று மாற வேண்டும். ஆளுங்கட்சி அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை, ஹிஜாப் அணிவது நோக்கம் அல்ல சாதாரண பெண்களைப் போல வர வேண்டும் என்பதே விருப்பம், இதில் என்ன தவறு இருக்கிறது.
தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? நாளை வாக்கு எண்ணிக்கையின்போது முகத்திரை அணிந்துகொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? விமான நிலையத்தில் முகத்திரை கழற்றி முகத்தைக் காட்டுங்கள் எனத் தெரிவிக்கிறார்கள் அது சரியா தவறா?
முகவர் தன்னுடைய கடமையைச் செய்திருக்கிறார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான். அவர் சில கேள்விகள் கேட்கும்போது அலுவலர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் நாம். எங்களைப் பொறுத்தவரை பல இடங்களில் நடைபெற்றுள்ள தவறுகள் திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள்.
பிரச்சினைகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படாமலே உள்ளது. சரியான தேர்தல் நடைமுறையாகத் தெரியவில்லை. ஆளுங்கட்சியின் அழுத்தம்தான் இதன் காரணம் என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் மீறி பாஜக மிகச்சிறந்த வெற்றியைப் பெறும்” என்றார்.
இதையும் படிங்க: 'ஆளுங்கட்சி அராஜகம்; கண்துஞ்சாது கழகப் பணியாற்றிய காவல் துறை!'