விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாஜக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றார். இதில், மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை பொறுப்பாளர் கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
‘வெற்றிவேல் வீரவேல்’ என்ற முழக்கத்தை எழுப்பி பேச்சை தொடங்கிய மத்திய இணையமைச்சர் வி.கே. சிங், "கடந்த 5 ஆண்டுகளில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது. 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பரப்புரைக்காக இங்கு வந்த நான், தற்போது, பாஜக தொண்டர்களை பார்க்கும் போது வெற்றி பெறும் விவேகம் காணப்படுகின்றது.
ஒரு பக்கம் ஜெயலலிதா, ஒரு பக்கம் கருணாநிதி என இருபெரும் தலைவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்தனர். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போதெல்லாம் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா முகம்தான்.
தற்போது கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி பெற நாம் விரும்புகிறோம். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.
தேர்தலில் பாஜக, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். நமது லட்சியம் திமுகவை தோல்வியடையச் செய்வது. ஸ்டாலின் ஆட்சி கொள்ளைக்காரன் ஆட்சி.
நமது கட்சியின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்லவேண்டும். அது நமக்கு வாக்காக மாறும். பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இதை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்கு கேட்க வேண்டும்.
திமுக செய்யும் பொய் பரப்புரைக்கு எதிர் பரப்புரையை பாஜக தொண்டர்கள் செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்துடனே அவர் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: 'வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம்' என்ற தலைப்பில் அமித் ஷா பரப்புரை!