கரோனா நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் 55 நாள்களாக ஆட்டோ இயங்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்தாயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆட்டோக்கள் இயங்க தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கரோனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரியும் தகுந்த இடைவெளியுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கக் கோரியும் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:ஆட்டோக்களை இயக்க அனுமதி வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை