சிவகாசியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வரும் காலங்களில் அய்யா வைகுண்டர் பிறந்த நாள் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அவரது வரலாறுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து அனைவரும் பயிலும் வகையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசுகையில், 'வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது இந்து மக்கள் கட்சியின் நோக்கமல்ல. ஆன்மிக அரசியல் கோலோச்சுவது தான் எங்களது நோக்கம்.
ரஜினியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாகத் திரட்டுவோம். இதை ஏற்றுக்கொண்டு கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்' எனக் கூறினார்.
மேலும், ரஜினியும் கமலும் கூட்டணி சேர்ந்து வருகின்ற சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் கமலுக்கு எதிராக அர்ஜூன் சம்பத் பேசியிருப்பது மநீம கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 21 பேர் மீட்பு!