விருதுநகர்: சங்கரலிங்கபுரம் அருகே கட்டனார்பட்டியில் 76ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இக்கிராமசபைக்கூட்டத்தில் ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்டனார்பட்டி கிராம ஊராட்சி பகுதியைச்சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கு பின்பு செய்தியாளர்களைச்சந்தித்த மாணிக்கம் தாகூர், “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகி அரசு துறைகளில் பல்வேறு மாற்றத்தினை பெற்றாலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவதற்கு கிராமப்புறங்கள் தான் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இலங்கையில் ராஜபக்ச அரசு சீனாவிடம் அடகு வைத்ததால் தான் இலங்கை இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜபக்சவின் இனவாத வெறுப்பு அரசியலும் சீனாவிற்கு அடிமையாகப்போனதால் தான் இலங்கை இப்படிப்பட்ட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா - இலங்கை உறவு என்பது இலங்கையை அழிப்பதற்கான உறவாக நாங்கள் பார்க்கிறோம். ஆகையால் இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத்தேர்தல் என்பது மோடியா..? மக்களா..? என்று தான் இருக்கப்போகிறது. ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி தான் மக்கள் பேசுகின்றனர்” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதற்கு முன் பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்களின் காலங்களில் இத்தகைய அருவருக்கத்தக்க செயல்கள் நடந்தேறியதில்லை. அண்ணாமலை பொறுப்பேற்ற பின்புதான் இது போன்ற அருவருக்கத்தக்க அரசியல் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலை செய்வது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல். இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்’ என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிவகாசியில் "2023" புத்தாண்டுக்கான காலண்டர் ஆல்பங்கள் தயார்!