சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளை ஏற்றும் வகையில் மூன்று 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அதில் வேலைசெய்யும் பாண்டித்துரை என்னும் ஓட்டுநரின் குடும்பம் வேலையை விட்டு வரும்படி அவரை கெஞ்சிய நிலையில், எனக்கு சமூக அக்கறை தான் முக்கியம் என்று குடும்பத்தினருடன் அவர் உரையாடும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கேகே நகர், அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில், பாண்டித்துரை வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் இந்த வேலையை விட்டு வரும்படி கெஞ்சியுள்ளனர்.
ஆனால், தனக்கு சமூக அக்கறைதான் முக்கியம் என்றும், இந்த வேலையை விட்டு வர முடியாது என்றும் பாண்டித்துரை குடும்பத்தினரிடம் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த உரையாடல் கேட்பவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது.