சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருவிழாவாக விளங்குவது சித்ரா பௌர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான பெரிய கொல்லப்பட்டி, சின்னகொல்லப்பட்டி, அய்யம்பட்டி, சடையம்பட்டி, சத்திரப்பட்டி, அணைக்கரைப்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளக் கூடிய கோலாகலமான நிகழ்ச்சியாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியின் போது சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோயிலில் வீற்றிருக்கும் கள்ளழகர் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பின்பு வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி நிறுத்தப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் கோயில் திருவிழா, விசேஷம் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. எனவே சித்ரா பௌர்ணமி நாளான இன்று நடைபெற இருந்த கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரியப்படுத்தினர். எனவே இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்குள்ளேயே கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு பக்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்