விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அதிமுக மகளிர் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக எம்பி ஆ. ராசாவை கைதுசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட இணைச்செயலாளர் அழகு ராணி தலைமையில் நகர - ஒன்றிய மகளிரணிச் செயலாளர்கள் ராணி, லீலா ஆகியோர் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுகவினர் தொடர்ந்து பெண்களை அவதூறாகப் பேசி வருவதாகவும், ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை பெற்றுவந்த திமுக கட்சியினருக்கு இப்படி பேச என்ன தகுதி உள்ளது எனப் பெண்கள் ஆவேசமாகக் கண்டன கோஷமிட்டனர்.
சாத்தூரில் ஆ. ராசாவை கைதுசெய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் ஆலங்குளம் அதிமுக கட்சி நிர்வாகிகள் நகர - ஒன்றியச் செயலாளர்கள் மகளிரணி, தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள திடல் பகுதியில் அதிமுக மகளிரணி, நகர - ஒன்றியச் செயலாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இணைந்து ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆ. ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்: உருவ பொம்மையை எரித்து போராட்டம்