இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது, "தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை விருதுநகரில் 1595 நபர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் மூன்று மடங்காக கரோனா அதிகரித்துள்ளது.
மதுரையில் 5799 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு பரிசோதனை முடிவு காலதாமதம் தான் முக்கிய காரணம். அதிலும், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யும் கருவி, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த மாவட்டத்தில் எடுக்கும் மாதிரிகள் தேனி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றன.
இதனால் முடிவுகள் தெரிவதற்கு ஐந்து நாட்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பரிசோதனை செய்தவர்கள் வெளியில் சென்று வருவதால் அவர்கள் மூலம் மற்றவருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. விருதுநகரில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். எனவே, கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஏனென்றால், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்னைக்கு சென்றுவிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், விருதுநகரில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனவே, முதலமைச்சர் பழனிசாமி தனி கவனம் செலுத்தி தென் மாவட்ட மக்களை காப்பாற்ற ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவியை உடனடியாக வாங்கி பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்". இவ்வாறு அந்த காணொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.