விருதுநகரில் இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பகை காரணமாக அருண்பாண்டியன் (24) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, காவல் துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் பஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்புதாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சி, நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் அல்லம்பட்டியைச் சேர்ந்த செல்வம் (எ) ஏஞ்சல் செல்வம் (26), தியாகராஜன் (23), க. விஜய் (எ) குரங்கு விஜய் (28), மணிகண்டன் (எ) பாம்பு மணி (29), முத்தழகு (27) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
![விருதுநகர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tnvnrmurderaccusedarrest_02082019080510_0208f_1564713310_101.jpg)
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓராண்டுக்கு முன்பு விருதுநகர் அல்லம்பட்டியில் சங்கர் என்பவரின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்க கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர்களிடமிருந்து கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி, மூன்று இருசக்கர வாகனங்கள், இரண்டு ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இரண்டு சாதாரண ஃபோன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.