விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான ராஜம்மாள் பட்டாசு நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 14 தொழிலாளர்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி, சத்தூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி நான்கு தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.
அப்போது, மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்கிற்காக பட்டாசு தொழிற்சாலையிலிருந்து 50ஆயிரம் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முழுமையான நிவாரண நிதியாக கடந்த ஜூன் 21ஆம் தேதி 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகள் பட்டாசு தொழிற்சாலையால் வழங்கப்பட்டது. இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் காசோலையை இருப்பு வைக்க சென்றபோது காசோலையின் கணக்கில் பணம் இல்லை என வங்கியில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பட்டாசு தொழிற்சாலையின் இச்செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மன வேதனையடைந்தனர். பின்னர், கரோனா காலத்தில் வேலையிழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் காசோலை வழங்கி ஏமாற்றிய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கணேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விருதுநகர் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: பழைய இரும்புக் கடைக்குச் செல்லும் விசைத்தறிகள்...?