விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள வசந்தம் நகர் பகுதியில் வசித்துவந்தவர் நவநீத கிருஷ்ணன்(25). இவர், அந்தப் பகுதியில் கட்டிட தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளது.
மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக, கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம்போல குடித்துவிட்டு நவநீத கிருஷ்ணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது நவநீத கிருஷ்ணனின் தாய் அருகிலுள்ள கடைக்குச் சென்றார். அந்த நேரம் வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நவநீத கிருஷ்ணன் வாயை துணியால் கட்டியதோடு, கட்டையால் தாக்கி, அவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்து, இரு சக்கர வாகனத்தில் உடலை எடுத்து சென்று அருகிலுள்ள பூவநாதபுரம் பகுதியிலுள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றனர்.
வீடு திரும்பிய நவநீத கிருஷ்ணன் தாயார், வீட்டினுள் ரத்தம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் வீட்டில் இருந்து சென்றதாகத் தெரிவித்தனர்.
இருசக்கர வாகனம் சென்ற வழியில் பின்தொடர்ந்து சென்ற அப்பகுதி கிராம மக்களால், தப்பியோடிய நபர்களை பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், நான்கு பேரும் அருகில் உள்ள எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
சரண் அடைந்த நபர்கள் அளித்த தகவலின்பேரில் நவநீத கிருஷ்ணன் உடலை மீட்ட காவல்துறையினர், நால்வரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து இளைஞரை கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.