தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுக்க தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த மாறனேரி தாலுகாவிற்கு உட்பட்ட ஒத்தப்புலி கிராமத்தில் நேற்று (மார்ச் 5) பறக்கும் படையைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இடையன்குளத்தில் இருந்து சிவகாசியை நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டிவந்த புதியராஜ் விசாரித்தபோது, அவரிடம் ரூ. 4 லட்சத்து 6 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.
புதியராஜிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் இடையன்குளம் பெட்ரோல் பங்கின் மேலாளராக பணியாற்றிவருவதும் சிவகாசியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கட்டுவதற்காக அந்த தொகையை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை சிவகாசி வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்!