விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் டி.எஸ்.பி வினோதினி, திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றம் அனுமதி: இந்த மனு இன்று (மார்ச் 29) பிற்பகல் திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை: மேலும், சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இளம்பெண் பாலியல் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் 4 பேரிடமும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை அடிப்படையில் கிடைக்கும் தடயங்களை சேகரிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் கொண்ட 13 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 7 நாட்கள் நடைபெறும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்