விருதுநகர்: சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் 30க்கும் மேற்பட்ட நாய்களை தலையில் அடித்தும், சுருக்கு கம்பி போட்டும் கொன்று வருவதாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா என்பவர் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் ஏராளமான நாய்கள் கொல்லப்படுவதாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். சுனிதா அளித்தப் புகாரின் பேரில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி, மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிப்பன், தங்கப்பாண்டி, அய்யனார் ஆகியோர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி, மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், தங்கப்பாண்டி, அய்யனார் ஆகிய மூவரும் ஒரு நாய்க்கு 300 ரூபாய் வரை சம்பளம் பெற்றுக்கொண்டு 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றது தெரிய வந்ததது.
நாய்களை கொன்று ஊருக்கு வெளியே ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளனர். நாய்கள் புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்த போது நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமியின் கணவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், தங்கப்பாண்டி, அய்யனார் ஆகிய 4 பேரை ஆமத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மரங்களைக் கடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை..!