விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காய்கறி மளிகைப் பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன் வழங்கினார்.
பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவைப் பரிமாறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட அவர், “விருதுநகர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 342 நபர்கள் கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து 12 ஆயிரம் நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கப் போதுமான படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் மாவட்டத்தில் எந்தவித பிரச்சினையும் தடையும் இல்லை.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தபோது அவர்கள் வெளியே சுற்றுவதாக வந்த புகாரையடுத்து வீடுகளில் தனிமைப்படுத்துவதைத் தவிர்த்து கரோனா சிகிச்சை மையத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன.
மாவட்டத்தில் இதுவரை 18 கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மாவட்டத்தில் இதுவரை மூன்று நபர்கள் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மேல் சிகிச்சைக்காக இருவர் மதுரை அரசு மருத்துவமனைக்கும், ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள் தமிழ்நாடு அரசிடம் கேட்டிருக்கிறோம். விரைவில் விருதுநகர் மாவட்டத்திற்கு கறுப்புப் பூஞ்சைக்கான மருந்து வரும்.
இந்தத் தொற்றுக்கு விரைவில் மாவட்டத்திலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் இதுவரை மூன்று நாள்களுக்கு ஒருமுறை அகற்றப்பட்டது. இனி தினசரி அகற்றப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: நீதிமன்றம் 'பளீச்'!