கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மதுப்பிரியர்கள் போதைக்காகக் கள்ளச் சாராயம், கள்ளு போன்றவற்றை நாடிச் செல்கின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர், சொக்கநாதன் புத்தூர் கிராமப் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. தற்போது பதநீர் சீசன் என்பதால் பனை விவசாயிகள் நுங்கு மற்றும் பதநீர் விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் போதைக்காக அலையக்கூடியவர்கள் கள்ளச்சாராயம் எங்கு கிடைக்கும்? கள்ளு எங்கு கிடைக்கும்? என்று அலைந்துவருகின்றனர். இதைப் பயன்படுத்தி, இப்பகுதியில் கள்ளு இறக்கி அதில் மாத்திரைகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பெயரில், சேத்தூர், சொக்கநாதன்புத்தூர் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சொக்கநாதன்புத்தூரில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட தங்கச்சாமி, மணி என்ற இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த 4 குடம் கள் குடங்களை கீழே கொட்டி அழித்தனர்.
ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, சேத்தூர் பகுதியில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட கணவன் மணிகண்டன், மனைவி பொன்னுத்தாய் ஆகிய இருவரும் காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து தப்பியோடி தம்பதியரைத் தேடிவரும் காவல்துறையினர், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு!