விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச்.7) உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இந்த பட்டாசு ஆலையில் 40 அறைகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கன்னிச்சேரி மற்றும் கட்டனார் பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(43), கருப்பசாமி(60) ஆகிய இருவரும் பேன்சி ரக பட்டாசுகளுக்குத் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பட்டாசு திரியில் திடீரென்று உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த முகத்துப்பாண்டி, கருப்பசாமி ஆகிய இரண்டு தொழிலாளர்கள் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் தொடர்ச்சியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி, கருப்பசாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் பட்டாசு ஆலை போர்மேன் சுப்புராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல, கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் கிராமம் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய மல்லிகா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகள் பட்டாசு ஆலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Fire accident: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பெண் உட்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்!