விழுப்புரம்: வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய அத்தியாவசிய தேவைக்காக ஆன்லைன் மூலமாக ரூபி என்கிற இணையதளத்தில் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பின்னர், அவர் பெற்ற கடன் தொகையை முழுவதுமாக செலுத்தியுள்ளார்.
இருந்தபோதிலும் அவர் பெற்ற கடனில் மேலும் நிலுவைத்தொகை உள்ளதாகவும் அந்த தொகையை செலுத்த வேண்டும் எனவும் கூறி வட மாநில கும்பல் ஒன்று மிரட்டி வந்துள்ளது. இவர்களின் மிரட்டலுக்கு பயந்து 3 லட்சம் ரூபாய் வரை அப்பெண் பணம் செலுத்தியுள்ளார்.
மேலும், இன்னும் பணம் செலுத்துமாறு தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பணத்தை செலுத்த தவறினால் தங்களின் ஆதார் மற்றும் பான் கார்டு சம்பந்தப்பட்ட தகவல்களை முடக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பெண் பெற்ற கடன் குறித்து குறுஞ்செய்தியாக பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அந்த மோசடி கும்பல் அனுப்பியுள்ளது. இதனால் அப்பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், இத்தகைய மோசடி கும்பலை கண்டறிந்து உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சினிமா பட பாணியில் செயின் பறிப்பு சகோதரர்களை 4 கி.மீ., துரத்திச்சென்று கைது செய்த போலீசார்!