விழுப்புரம்: அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் இளங்கோவன். இவருக்கும் புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த இந்துமதிக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஐந்தே மாதத்தில் தனது கணவருக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது மனைவியிடம் நூறு சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கி வரும்படி அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்துமதியின் பெற்றோர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை இளங்கோவன் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். அதனை இளங்கோவன் இரண்டு கோடி ரூபாய்கு விற்பனை செய்துவிட்டு இந்துமதியுடன் வாழாமல், அவலூர்பேட்டையில் தங்கியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும் இளங்கோவன் வராததால், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு முறைக்கு மேல் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று (ஜூன் 18) பாதிக்கப்பட்ட இந்துமதி தனது பெற்றோருடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்துசென்றனர். மேலும் தனது கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இந்துமதி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது