விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் இதுவரை பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் வேட்பாளர் பிரகலதா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ராஜா, அரசன் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் வேட்பாளர் துரை. ரவிக்குமார் இன்று தனது வேட்புமனுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சுப்பிரமணியனிடம் தாக்கல் செய்தார். அவருடன் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்.
மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 2004ஆம் ஆண்டில் திமுக பெற்ற வெற்றியை போல், மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி வெற்றிபெறும்.
அடுத்து மத்தியில் ஆளப்போகும் அரசையும், பிரதமர் யார் என்பதையும் இந்த கூட்டணி முடிவு செய்யும். மத்திய பாஜக அரசு மீது இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கள் அணிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது" என்றார்.
முன்னதாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.