விழுப்புரம் கோலியனூர் அடுத்த பணங்குப்பம் புதுநகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அங்கு சென்ற வளவனூர் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் விழுப்புரம் புதுவை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.