விழுப்புரம்: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அண்மையில் மாயமானதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆவணங்கள் இதுவரை கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பவும், முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கவும் விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த ஆவணங்கள் மாயமான சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி