Body:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள காட்டுசிவிரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (38). இவர் நகை அடகு கடை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் தனது கடையில் வேலை செய்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் குழந்தை பிறந்தவுடன் மனைவியை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து கணவரிடம் நியாயம் கேட்கப்போன மனைவியை சாதியின் பெயரை கூறி திட்டி தாக்கி உள்ளார். இதுதொடர்பாக ஜெயந்தி திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த வழக்கு விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எழில், குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்செல்வனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவருக்கு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.