விழுப்புரம்: நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரிடம், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் 9 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்., "நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய வந்த மத்திய குழுவிடம் 9 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளேன். நிவர் புயல் பாதிப்பை பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ நேரில் வந்து பார்வையிட வேண்டும்.
நிவர் புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள குடிசை வீடுகள், சிதிலமடைந்த வீடுகளுக்கு பதிலாக கான்க்ரீட் வீடுகளைக் கட்டித்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பெருமளவில் மரங்களை நட்டு வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்" என்றார்.