தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் நாடக போட்டிகள் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நவ.4ஆம் தேதி நடைபெற்றது. இதில், காந்திய சிந்தனையில் அறிவியல் கருத்துகள், தூய்மை, உடல்நலம் மற்றும் சுகாதாரம், பசுமை, புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல் வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களிலிருந்து 310 மாணவர்களும், 31 வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இதில் சிறந்த அறிவியல் நாடக குழுவுக்கான முதல் பரிசை சேலம் மாவட்டம் மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாவது பரிசை திருச்சி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசை விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் பெற்றன.
இதேபோன்று சிறந்த இயக்குனருக்கான முதல் பரிசை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஷீபா தட்டிச் சென்றார். சிறந்த கதாசிரியருக்கான விருதை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி பிரியாவும், சிறந்த நடிகருக்கான விருதை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவனும் கைப்பற்றினர்.
இதனிடையே, நவம்பர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழாவில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் சேலம் மாவட்டம் மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும், திருச்சி மாவட்டம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து இந்த நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செஞ்சி மஸ்தான், மைலம் சட்டப்பேரவை உறுப்பினர் மாசிலாமணி, திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 3 சாமி சிலைகளை உடைத்து வயல்வெளியில் வீசிச்சென்ற சம்பவம்: ஈரோட்டில் பரபரப்பு