கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கரோனா நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்றது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 53 ஆயிரத்து 535 நபர்களுக்கு 5.35 கோடி ரூபாய் மதிப்பில் தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரண தொகையானது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.