விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (நவ. 25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுகளை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலரின் அப்போதைய வாகன ஓட்டுநராக இருந்து, தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலமுருகன் என்ற காவலரும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு அப்போது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணிபுரிந்து, தற்போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணிபுரிந்து வரும் ஆயுதப்படையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்ற காவலரும் சாட்சியம் அளிப்பதற்காக இன்று (நவ. 25) நேரில் ஆஜராகினர்.
காலை 10.30 மணிக்கு ஆஜராகிய இவர்கள் இருவரும் அடுத்தடுத்து நீதிமன்ற கூண்டில் நின்று மதியம் 12.30 மணி வரை சாட்சியம் அளித்தனர். இவர்கள் அளித்த சாட்சியங்களை நீதிபதி கோபிநாதன் பதிவு செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வரும் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வரும் ஒன்றாம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலர் ஆஜராக வேண்டும். அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Simbu-வுக்கு இப்படியும் ஒரு ரசிகனா.. சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த அட்ராசிட்டிகள்!