விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரபு. இவர் கடந்த 8ஆம் தேதி சக நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து பேசிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், "தனிமனித பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அவரவர்களின் குடும்பத்தினர்களை மகிழ்விக்க இருக்க வேண்டுமே தவிர, சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது. பிறந்தநாள் விழா காணும் நபரின் நண்பர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கேக்கை அரிவாள் மற்றும் பட்டா கத்தி, வீச்சு போன்ற அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி வெட்டுவதும், பின்னர் அந்நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றச்செயல். இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டாக் கத்தி சம்பவம்: கல்லூரி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்!