விழுப்புரம் மாவட்டம் நேருஜி சாலையில் வசித்து வருபவர் மோகன். 97 வயதான இவர் நேற்று (நவ. 7) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "தனக்கு சொந்தமான சொத்தை, தனது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துவிட்டேன். ஆனால், தற்போது மூவரும் தன்னை சரிவர கவனித்துக் கொள்ளாததுடன் உணவு, தண்ணீர் கொடுப்பதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான காவலர்கள், முதியவரை அழைத்துக்கொண்டு அவரது மகன்கள் செல்வராஜ், ரமேஷ், சிவராஜ் ஆகியோர் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று விசாரணை செய்தனர்.
இறுதியாக, இளைய மகன் சிவராஜுக்கு அறிவுரை வழங்கி முதியவரை அவர் பொறுப்பில் ஒப்படைத்தனர். காவல் துறையினரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.