செயில் (SAIL) நிறுவனத்தால் சேலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சேலம் உருக்காலையில், மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “உயர்ந்து வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்கனவே நாம் ஆக்சிஜன் பற்றாக்குறை எனும் நிலையில் உள்ளோம். நாட்டில் உள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களிலும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை அனுமதிக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று (மே.04) சேலம் உருக்காலை பொது மேலாளர் திரு ரவிச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். அங்கு 108 மெட்ரிக் டன் ‘இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜன்’ தயாரிக்கப்படுகிறது. ஆனால் அதை மருத்துவத்துறையில் பயன்படுத்தும் ஆக்ஸிஜனாக மாற்றும் வசதி அங்கு இல்லை என்று அறிந்தேன்.
அங்கு மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கேற்ப அங்கிருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. சேலம் உருக்காலையில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஆக்ஸிஜன் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்தி அங்கு மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அலைமோதிய கூட்டம்-மருத்துவமனையின் நடவடிக்கைள் என்ன?