மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனரும் பெரியாரின் முதன்மைத் தளபதியுமான வே. ஆனைமுத்து (96) உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது உடலுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், "பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக் காரணமான மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வைத்ததிலும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தச் செய்ததிலும் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்தவர். பெரியாரியத்தோடு மார்க்சியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைத்து இளைஞர்களிடையே பரப்பியவர்.
சமூகநீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது மறைவு பேரிழப்பு. அவருக்கு நேரில் சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.