விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், சட்டத்துக்குப் புறம்பாக கரும்பு கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுவருகிறது. இங்கு இயங்கிவரும் மூன்று கூட்டுறவு, நான்கு தனியார் சர்க்கரை ஆலைகள், பிற மாவட்டத்தில் இயங்கிவரும் கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு இம்மாவட்டத்திலிருந்து கரும்பு சப்ளை செய்யப்படுகிறது.
ஒரு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவுசெய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத கரும்பை வெட்டி வேறு ஆலைக்கு எடுத்துச் செல்வது அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பேட்டி எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்வதற்கு விவசாய எல்லைகளை அரசு வகுத்துக் கொடுத்துள்ளது.இந்த மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிற 11 ஆலைகளும் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளில்தான் கரும்புகளை பதிவும் கொள்முதலும் செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத கரும்புகள் அந்தந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஒரு சர்க்கரை ஆலை எல்லைப் பகுதியிலிருந்து பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத கரும்புகளை வெட்டி வேறு ஆலைகளுக்கு எடுத்துச் செல்வோர் மீது சட்ட ரீதியான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்படாத கரும்பை அதன் எல்லையிலிருந்து வெளியில் எடுத்துச் செல்ல நேர்ந்தால் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்திடம் சர்க்கரைத் துறை இயக்குநர் ஆணையின்படி தடையில்லாச் சான்றிதழ் பெற்று எடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே, அனைத்து விவசாயிகளும் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் 1996இன் படி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.