வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவம் 25) மாமல்ல்புரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பொழியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இன்று மரக்காணம், அழகன்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆய்வு செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்ர், தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மற்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கூரை வீடுகளில் உள்ள மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புயல் பாதுகாப்பு மையங்களில் மற்றும் இதர தங்கும் மையங்களில் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுதவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்துள்ளனர். இதுதவிர கடலோரப் பகுதிகளில் உள்ள சிறிய, பெரிய படகுகள் அனைத்தும் கரையோரங்களில் பத்திரமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் மழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். வணிகர்கள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தர வேண்டும்”என்றார்.
இதையும் படிங்க : மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பு