விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் தன்னிடம் இருந்த பூர்வீக வைர நகைகளை விற்பனை செய்வதற்தாக கடந்த 13ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர்களை வரவழைத்து விக்ரவாண்டி அருகேயுள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் வைத்து நகைகளை காண்பித்துள்ளார்.
பின்னர் இடைத்தரகர்கள் பணம் தருவதற்காக தீவனூர் சாலைக்கு, கருணாநிதியையும், அவரது நண்பரான பிரகலாதனையும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும், கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டும் 52 கிராம் வைர நகைகளை அந்த கும்பல் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மயிலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தீவனூர் பகுதியைச் சேர்ந்த அருள்முருகன், பரந்தாமன், ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.