திருக்கோவிலூர் மார்கெட் வீதியில் நித்தியானந்தம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் எஸ்பிஐ ஏடிஎம் (SBI ATM) கடந்த 7 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்நிலையில், நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, லைட் ஆகியவற்றின் மீது ஸ்ப்ரே அடித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இயந்திரத்தின் மேல் பகுதியை உடைத்த அவர்கள், பணம் இருக்கும் பெட்டியை உடைக்கும் முயற்சி தோல்வியுற்றதால் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதை காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்டு பிடித்துவிடக்கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடியை ஏடிஎம் மையத்தில் தூவிச் சென்றுள்ளனர்.
பின்னர் காலையில் பணம் எடுக்க வந்த சிலர் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி
இதேபோன்று செட்டித்தாங்கல் பகுதியில் உள்ள இண்டிகேஷ் ஏடிஎம் (indicash ATM) இயந்திரத்தை, நள்ளிரவில் சிலர் சூலம் போன்ற ஆயுதங்களுடன் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏடிஎம் இயந்திரத்தின் மேல் பகுதியை உடைத்தவர்கள் பணம் இருந்த கீழ் பகுதியை உடைக்க முடியாமல் திரும்பினர். இந்த கொள்ளை முயற்சி குறித்தும் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருக்கோவிலூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உசாரய்யா... உசாரு... ஏடிஎம் கார்டை திருடி 1.35 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த பெண்!