தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும்,18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கி, இன்று மதியம் மூன்று மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அனைத்துக் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இதுவரை, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரகலதா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கலியமூர்த்தி, அகில இந்திய மக்கள் கழக வேட்பாளர் ராஜா, சுயேட்சை வேட்பாளர் அரசன், விஸ்வநாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 26), விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அமமுக வேட்பாளரும், வானுார் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கணபதி, வேட்புமனுவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுப்பிரமணியிடம் தாக்கல்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கணபதி பேசுகையில், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடும், டிடிவி தினகரனின் ஒப்புதலோடும், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளேன்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு எந்த சின்னம் ஒதுக்கினாலும், தமிழ்நாட்டுமக்கள் எங்களை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பார்கள்.நான் வெற்றிபெற்றால் விடுபட்டுள்ள மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவேன்' என்றார்.
முன்னதாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர்ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.