விழுப்புரத்தை அடுத்த வேடம்பட்டு கிராமத்தில் சந்தியா என்விரோ டெக் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக், ரசாயனம் மற்றும் மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இந்த கழிவுகள் எரிக்கப்படுவதால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்து தூர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று தனியார் நிறுவனத்துக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து போலீஸாரின் சமாதான பேச்சுவார்த்தையை போராட்டம் கைவிடப்பட்டது.