விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த பழங்குடியின பெண் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது கணவர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். எனது கணவரின் இறப்புச் சான்றிதழ் வேண்டி கடந்த செப்டம்பா் மாதம் (2023) விண்ணப்பித்திருந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்யராஜ், என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்.
தற்போது நான் விதவை உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள நிலையில், கிராம நிர்வாக அலுவலர் எனது கைப்பேசி எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டு, தகாத முறையில் பேசி தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் வலியுறுத்திக் கூறி இருந்தார்.
அதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்யராஜை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பழங்குடியினப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "மன்சூர் அலிகான் சிறுபான்மையினர் என்பதால் பாஜக நெருக்கடி தருகிறது" - ரஞ்சன் குமார்