விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், மேடையில் பேசிய ஸ்டாலின், "மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுத்து தீர்ப்பேன். இன்னும் சில வாரங்களில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி முடியபோகிறது என்பதால் தான் தினமும் அபத்தமான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அரங்கேற்றி வருகிறார். தமிழ்நாடு மக்களுக்கு எதையும் எடப்பாடி பழனிச்சாமி செய்யவில்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “பட்ஜெட்டில் ஏராளமான கற்பனைகளை எடப்பாடி பழனிசாமியும், நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளதாகவும், அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனை பல லட்சம் கடன் வாங்கியது தான். சுய விளம்பரத்தித்காகவே அரசு பணத்தை பல கோடி செலவு செய்து அரசு கஜானாவை காலி செய்கின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி முதலமைச்சர் பழனிசாமி எடுத்து சென்றுவிட்டார்.
நேற்றைய தினம் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் கைகளை பிடித்து தூக்கி உயர்த்தி கட்டினார். அது இருவரின் கைகளும் ஊழல் செய்த கைகள் எனவும் அதற்கு நானும் உடந்தை என மோடி இருவரின் கைகளை தூக்கி காட்டினார்.
விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட மசோதாவை கொண்டு வந்த பிரதமர் மோடி திமுகவை குற்றஞ்சாட்டும் உரிமை இல்லை. வாய்க்கு வந்த வார்தைகளை பேசுவதை மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, புதுவையில் பாஜகவில் புதியதாக இணைந்தவர்கள் எல்லாம் பல்வேறு வழக்கு குற்றவாளிகள் என சிலரது பெயர்களை சுட்டிகாட்டி ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன்" எனக் கூறினார்.
பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி கூறுகின்றார், ஆனால் சிறப்பாக ஆட்சி செய்வது மத்திய அரசு மோடியா, இல்லை மாநில அரசு லேடியா என கேட்டவர் தான் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் செய்த கொள்ளையிலிருந்து தப்பிக்கவே நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஆதரிப்பதாகவும், பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் எடப்பாடி பழனிசாமி எனவும் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு!