விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடிக்கும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி (50). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் விவசாயி அங்கப்பன் (45). இருவருக்கும் ஏரியில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்தது குறித்து முன்விரோதம் இருந்தது.
இச்சூழலில் நேற்று முன்தினம் (நவ. 13) இரவு கந்தசாமி தனது தெருவில் குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்தார். அப்போது அங்கப்பன் தரப்பினர் தெருவில் பட்டாசு வெடிக்கக் கூடாது என தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு அங்கப்பன் தரப்பைச் சேர்ந்த கமல கண்ணன் (40) என்பவர் கந்தசாமியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது .
மேலும், தகராறை தடுக்க வந்த கந்தசாமி தரப்பைச் சேர்ந்த வினோத் (30), ராஜாங்கம் (45) ஆகிய இருவரையும் அங்கப்பன் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தகராறில் கந்தசாமி, வினோத் ராஜாங்கம் எதிர் தரப்பைச் சேர்ந்த கமல கண்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகராறு குறித்து புகார் கொடுப்பதற்காக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு கந்தசாமி தரப்புடன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் என்பவர் வந்தார். அவரையும் தகராறில் ஈடுபட்டவர்களோடு சேர்த்து வைத்து காவல் நிலையத்தில் காவல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து தகவலறிந்த தொரவி கிராம மக்கள் விழுப்புரம் - வழுதாவூர் சாலையில் மறியல் செய்ய முயற்சித்தனர்.
இது குறித்த தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கரை விடுவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம், பஞ்சாயத்து தலைவர் விடுவிக்கப்பட்ட செய்தியைக் கூறி பொதுமக்களை சமாதானம் செய்தனர். அதன் பிறகு சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.