விழுப்புரம் மாவட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராகிம் (45). விழுப்புரம் எம்ஜி ரோடு வீதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்றைய தினம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தான் பணியாற்றும் பல்பொருள் அங்காடியில் ரமலான் நோன்பு கஞ்சிக்காண பொருட்களை வாங்குவதற்காக சென்ற இப்ராகிம் மற்றும் அதே அங்காடியில் பொருட்களை வாங்க வந்த தீபக் ஆகிய இருவரையும் சகோதரர்கள். இருவர் மது போதையில் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில், இப்ராகிம் வயிற்றிலும், தீபக் முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, தப்பியோட முயன்ற இளைஞர்களை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இப்ராஹிம் உயிரிழந்தார். இதனை அடுத்து விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று ( மார்ச் 30 ) விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எம்ஜி ரோடு, காமராஜர் வீதி, பாதஷா வீதி மற்றும் விழுப்புரம் நகரின் முக்கிய மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வணிகர் சங்கங்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் இப்ராஹிம் உடலை மருத்துவமனையில் இருந்து நேராக பல்பொருள் அங்காடி வாசலில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை செய்து அங்கிருந்து சடலத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் இந்த கொலை குடும்ப பிரச்னை காரணமாக நடைபெற்றது என்று கூறியதால் வணிகர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே போல இறந்த இப்ராஹிம் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி புறவழிச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினர் இரண்டு பகுதிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
பின்னர், விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சாலை மறியல் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார். இதனால், திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரம் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படவே சாலை மறியல் கைவிடப்பட்டது.
ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற போராட்டத்தால் பொதுமக்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் நகரில் செயல்பட்டு வரும் மதுபான பார்கள் இரவு 10 மணிக்கு மேல் தங்களுடைய விற்பனையை தொடர்வதாகவும் இதனால் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. மேலும், இன்று நடைபெற்ற மும்முனை போராட்டத்தில் மதங்களைக் கடந்து அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக திரண்டு இது குறித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடையாறு கலாஷேத்ரா பாலியல் புகார்; தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரகசிய விசாரணை