விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சடையம்பட்டு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் சிந்து பைரவி. இதே அலுவலகத்தில் உதவி மின் இயக்கம் - பராமரிப்பு பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருபவர் கவிதா.
கவிதா மின்பகிர்மான பயன்பாட்டாளர்களுக்கு ஆணை வழங்குவதில் கையூட்டு பெற சிந்துபைரவியை வற்புறுத்தி உள்ளார். இதற்கு உடன்படாத சிந்து பைரவியை கவிதா தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
ஏற்கனவே குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்துவரும் சிந்துபைரவி இதனால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு அலுவலகத்தில் வைத்தே ரத்த அழுத்த மாத்திரைகளுடன் தூக்க மாத்திரைகளும் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த சக ஊழியர்கள் சிந்து பைரவியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது வீடு திரும்பிய சிந்து பைரவி இச்சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்திலும் தனது துறை உயர் அலுவலரிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை காவல்துறையினரும், துறை உயர் அலுவலரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.