விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள பகண்டை கூட்டு சாலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக முறையான கல்வி தகுதி, உரிய ஆவணம் இல்லாமல், அதிக பணம் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதார இணை இயக்குநர், நலப்பணி அலுவலர் ஷன்முககனிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்று பகல் 12 மணியளவில் அப்பகுதியில் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் உரிய அனுமதியின்றி அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும், அதிக விலைக்கு தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவம் செய்து வந்த ஆருண்யா(24) இளங்கலை கல்லூரி படிப்பும், அவரது கணவர் கோவிந்தன்(25) 10ஆம் வகுப்பும் படித்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ பொருட்களில் அதிகமானவை தடை செய்யப்பட்ட மருந்துகள் என்பதும், அவற்றிற்கு அதிக விலை வைத்து அப்பகுதி மக்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடித்த விழுப்புரம் மாவட்ட இணை இயக்குநர், நலப்பணி அலுவலர் ஷன்முககனி, பகண்டை கூட்டுசாலை காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.