விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி சாலை, மரக்காணம் கூட்டுபாதை அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு பணியில் இருந்த சுரேஷ்(24), செந்தில்(38) ஆகிய இருவரையும் அதிகாலை 3 மணி அளவில் கத்தியால் வெட்டி ரூ.38 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து திண்டிவனம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருந்த்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று(பிப்.13) மதியம் ஆய்வாளர் மூர்த்தி தலைமையில், உதவி ஆய்வாளர் தமிழ்மணி, காவலர்கள் ஜெயகிருஷ்ணன், சிவகுமார் ஆகியோர் திண்டிவனம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்ட காவல் துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்ட போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த மூவரையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மூவரும் சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியா (எ) நவீன் முத்து பாண்டியன்(22), கணேசன்(20), சென்னை மாடம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த தரணிகுமார் (25), என்பதும், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி இரவு பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், இதேபோல பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டபோது கீழே விழுந்ததில் பாண்டியா (எ) நவீன் முத்து பாண்டியன் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று கத்தி, திருட்டு இருசக்கர வாகனம், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கத்திமுனையில் ரூ.38 ஆயிரம் கொள்ளை: குற்றவாளிகளுக்கு வலை!