விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை காரணமாக, அண்மையில் ஒரே குடும்பமே பலியான நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து மாவட்டத்தில் சட்ட விரோத லாட்டரி விற்பனையைக் கண்காணிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூலை.16) சட்ட விரோதமாக ஆன்-லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் பெரிய காலணியைச் சேர்ந்த பிரதாப், மருதூர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் மற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முபாரக் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து நான்கு தொலைபேசி, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 10,600 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.